"மாதா, பிதா, குரு, தெய்வம்" விளக்கம்


'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம்கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து
இருக்கிறது. 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது ஏறுவரிசையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும், இறங்கு வரிசையில் அல்ல
படைத்தவன் தான் கடவுள் எனில், நம்மை படைத்த அன்னையர் தான் கடவுள். அன்னைதான் அனைத்துக்கும்அடிப்படையானவள்.அவள் இல்லையெனில்,நாம் இந்த
மண்ணில்அவதரித்திருக்க முடியாது.

சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும்
பாட்டியாக,அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும்ஆசானாக.. இப்படிப் பெண், தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம்வந்தாலும், அன்னை என்றபாத்திரமே உன்னதமானது.உலகில் ஈடு இணையற்றது அன்னை. அன்னையே முதல் தெய்வம்.


அன்னையை, எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. வயதான காலத்திலும்,அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும்மே 2வது ஞாயிறு உலக அன்னையர் தினமாககொண்டாடப்படுகிறது. இன்று நேரிலோ அல்லது போன் மூலமோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.

எப்படி வந்தது

பண்டைய கிரீசில், 'ரியா' என்ற கடவுளைத் தாயாக வழிபட்டனர். ரோமிலும், 'சிபெல்லா' என்ற பெண் கடவுளை, அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிறு
அன்னையர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதை இந்தியா, ஜெர்மனி
உள்ளிட்ட70 நாடுகள் பின்பற்றுகின்றன.


தாய்க்கு தலைவணங்கு

சமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பினாலும்,
தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர்.அன்னையை போற்றாதஎவரும் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது.சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு
முக்கியம்.இன்றைய தினத்தில் ஒவ்வொரு வரும்அன்னையுடன் இந்த நாளை கொண்டாடி
மகிழலாம். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட, நமக்கு எல்லாமுமாய்
இருக்கும்அன்னையை போற்றி வணங்குவோம்



அம்மா - உலக அன்னையர் தினம்


உலக அன்னையர் தினம். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே தொலைக்காட்சி, வானொலி என மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்தும் போட்டி போட்டு 'உலக அன்னையர்'களை குளிர்விக்கப் புறப்பட்டுவிடும். அன்னையர்கள் பெற்ற அருந்தவ மக்களும் தேடிப் பிடித்து அந்த ஒரு நாளில் மட்டும் அம்மாக்களுக்குச் சேவை செய்வதைப் பிறவிப் பயனாக நினைக்கத் தொடங்கி விடுவர். (இங்கே 'அம்மா; என்ற சொல் தமிழக அரசியல் கலவாதது).

தமிழர்களின் வாழ்வில், வரலாற்றில் அன்னையர்களுக்கு இதற்கு முன்னர் விழாக்கள் எடுக்கப்பட்டிருக்கிறதா? சல்லடை போட்டுத் தேடினாலும், சிறு குறிப்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக அம்பை சொல்வது போல, தன் வாழ்நாளில் ஒரு லட்சம் தோசைகள் வார்த்தவளாகவே அம்மாக்களை இனம் காண முடிகிறது. எட்டுக்கு எட்டு அளவுள்ள வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையிலேயே அம்மாக்கள் இருந்திருக்கிறார்கள்.

அம்மாக்களின் உயர்ந்த பட்ச லட்சியம என்ன? ஆசைகள் என்ன? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாலும் விடை என்னவோ குழந்தைகள் என்பதிலேயே முடிகிறது. குழந்தைகளின் வாழ்வைச் சுற்றியே அம்மாக் களின் வாழ்வும் கட்டப்பட்டிருக்கிறது. குழந்தை பெற்றால் மட்டுமே அவளுக்குப் பெயர் 'அம்மா'. இல்லாதபட்சத்தில் அவளுக்கு இச் சமூக அமைப்பில் குறைவுபட்ட இடமே வழங்கப் படுகிறது. வேண்டுமானால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அம்மா என்றழைத்துக் கொள்ளலாம்.

எல்லா குழந்தைகளும் ரஜினிகாந்த், பண்டரிபாய் போல இருந்து விட்டால், அன்னையர் தினத்தை ஞாபகப் படுத்த வேண்டியிருந்திருக்காது. (அம்மா என்றழைக் காத உயிரில்லையே என்கிற 'மன்னன்' படப் பாடலை நினைவுபடுத்திக் கொள்க;)

தமிழின் செவ்விலக்கியங்களை விட நாட்டுப்புற இலக்கியங்கள் அம்மா பற்றிய பதிவுகளை எதிர்மறையாகவேனும் சுட்டியிருக் கின்றன. செவ்விலக்கியப் பதிவுகளில் 'அம்மா' பற்றி ஒரே விதமாகவே வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன. காதலனுடன் ஓடிப் போன தன்னுடைய மகள் போகும் பாதையில் என்னவிதமாகத் துன்பப்படுவாளோ! அவளால் வெயிலைத் தாங்க முடியுமா? என்றளவிலேயே அம்மாக்கள் சிந்தித்திருப்பதாக அக் காலத்திய புலவர்கள் வரையறுத்திருக்கின்றனர். மிஞ்சிப் போனால் மகள் சென்ற பாதையிலுள்ள மரங்களைப் பார்த்துப் புலம்புவதற்கு அனுமதிக் கப்பட்டிருக்கிறாள். மறந்துங்கூட தன்னுடைய துன்பங்கள் குறித்து அப்பாக்களிடம் புலம்பி யிருக்கவில்லை.

ஆனால் நாட்டுப்புறப் பாடல்கள் என்று வரும் போது அம்மாக்களின் புலம்பல்கள் நேரடி யாகவே ஒலிக்கின்றன.

"கிண்ணியிலே போட்ட சோற்றை
கீறித் தின்னப் பிள்ளையில்லை
ஊருக்குப் போகையிலை
உடன்வரப் பிள்ளையில்லை"

என்று அம்மாக்கள் குழந்தையின்மை குறித்துப் பாடுவதாக நாட்டுப்புறப் பாடல்கள் தெரிவிக் கின்றன. இப் புலம்பல் ஒரு கட்டத்தில் அவளைக் குற்றம் சாட்டும் நோக்கில் திரும்புவதை,

"பூக்கிற காலத்திலே
பூ மாறிப் போனேனே
காய்க்கிற காலத்திலே
காய் மாறிப் போனேனே"

என்ற வரிகள் எடுத்துக் க

ாட்டுகின்றன. குழந்தை வரம் பெறுவதற்காகத் தான் பட்ட கஷ்டங்களை,

"எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோவிலுக்குத்
தூண்டா விளக்கேற்றி]
சோதி பரதேசிகளுக்குத்
தூமடமும் கட்டி வைத்து"

என்று பாடல்களில் வெளிப்படுத்துகிறாள். இவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் பெற்ற பிள்ளையை அவள் சீராட்டும் விதமே அலாதி தான்.

"மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ நீ தெவிட்டாத மாங்கனியோ
எங்கள் குலம் மங்காமல் எதிர்குலத்தார் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ"

என்று சீராட்டித் தன்னுடைய குழந்தையைத் தாலாட்டுகிற அவள்,

"கடைக்குக் கடை பார்த்துக்
கல்லிழைத்த சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சை வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்
வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பருவுடன் வந்திடுவார்"

என்று பாடுகிறாள்.

குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், பேரன் - பேத்திகள்... என அம்மாக்களின் வாழ்வு முழுவதும் இந்த வட்டத்திற்குள்ளாகவே சுற்றி முடிந்து விடுகின்றது.

கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால், இந்தியச் சமூக வரலாற்றுப் பந்தயத்தில் பரிதாபமாக இடத்தைப் பறி கொடுத்து அம்மாக்கள் தோற்றுப் போன விசயம் தெரிய வரும். ஆரம்ப கட்டங்களில் தாய் வழிச் சமூக அமைப்பின் உயர்ந்த இடத்திலேயே அம்மாக்கள் இருந்தனர். அது பிற்பாடு உடமைப் பயன்பாடு போன்ற ஆணாதிக்கச் சிந்தனைகளெல்லாம் வேர்விட்ட பிறகே, படிப்படியாக முதன்மை ஸ்தானத்திலிருந்து இறக்கப்பட்டு சமையலறைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த விதமான அதிகாரப் பறிப்பு குடும்பம் என்கிற அமைப்பை முன்னிறுத்தியே சாத்தியமாகியது. இதைப் பற்றி ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுவார்.

"இப்பொழுது ஆடவன் வீட்டில் மெய்யான ஆதிக்கத்தை நிறுவிவிட்ட படியால் அவனுடைய தனி ஆதிக்கத்திற்கு இருந்த கடைசித் தடையும் தகர்ந்து விட்டது. தாய் உரிமையை ஒழிப்பதன் மூலமாகவும் தந்தை உரிமையை அரங்கேற்றுவதன் மூலமாகவும், ஜதைத் திருமணம் ஏக ஸ்திரீ விவாகமாகப் படிப்படியாக மாறுவதன் மூலமாகவும் தந்தையின் ஏதேச்சதிகாரம் ஊர்ஜிதமாகி நீடித்தது"

தாய் உரிமையின் வீழ்ச்சியும் தந்தை அதிகாரத்தின் எழுச்சியும் வேத நூல்களில் மிகவும் வெளிப்படையாக விவரிக்கப்படவில்லை. ஆனால் இந்த மாறுதல்களைக் குடும்பத்தின் வளர்ச்சியில் சுலபமாகப் பார்க்க முடியும். தாய் உரிமையின் வீழ்ச்சி பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுகையில்,

"தாய் உரிமையின் வீழ்ச்சி, பெண்ணினத்திற்கு ஏற்பட்ட உலக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியாகும். ஆடவன் வீட்டுக்கும் எஜமானான். பெண் சிறுமைப்பட்டு, அடிமையாகத் தாழ்த்தப்பட்டாள். அவள் அவனுடைய சிற்றின்ப இச்சைக்கு அடிமையானாள். குழந்தைகளை உற்பத்தி செய்யும் வெறுங் கருவியாக ஆனாள்" என்பார்.

ஆக நாட்டுப்புற வெளிப்பாடுகளும் இந்தியத் தத்துவ மரபு சார்ந்த காலகட்டத்தின் வெளிப்பாடுகளும் அன்னையை குழந்தை பெறுவதற்குண்டான கருவியாகவே பார்த்து வந்திருக்கின்றன என்பது விளங்குகிறது. தற்சமயம் நம்மிடையே பரிச்சயமாகியுள்ள நவீன வாழ்க்கை முறை பெண்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்குச் சுதந்திரமான இடத்தைத் தந்துள்ளதாகக் கற்பனைகள் நிலவுகின்றன. ஆனால் அது உண்மையல்ல என்று பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றளவும் தமிழகத்தின் தென்கோடிக் கிராமங்களில் சமையலறையை விட்டு வெளியே வராத நிலை தொடர்வது வருத்தமளிக்கக் கூடியது. இன்னும் கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்கோ நகர்ப் புறத்துக்கோ வாழ்நாளில் ஒரு முறை கூட பயணம் செய்யாத தாய்மார்களும் இருக்கிறார்கள். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த நிலைமை கண்கூடாகத் தெரிய வருகிறது.

மதுரைப் பகுதிகளில் "உங்க வீட்டில் மீனாட்சி ஆட்சியா? சொக்கநாதர் ஆட்சியா?" என்று கேள்விகள் எழுப்புவர். இந்தக் கேள்வியின் உள் அர்த்தம் தாய் ஆதிக்கம் செலுத்துகிறாளா? தந்தை ஆதிக்கம் செலுத்துகிறாரா? என்பதுதான். தாய் ஆட்சி செலுத்துவதாகச் சொன்னால் கௌரவக் குறைச்சலாய்க் கருதும் நிலையும் இருக்கிறது. 'வினையே ஆடவர்க்கு உயிர்' என்றவாறே கிராமப் புறங்களில் நிலையிருக்கிறது. பிள்ளைகளைக் கவனித்தல், பெண் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்த்தல் ஆகிய பணிகளே தாய்மார்களுக்குப் பிரதானமாக உள்ளது. ஒரு பெண் குழந்தை தவறு செய்தால், அந்தத் தவறுடன் தாயைச் சம்பந்தப்படுத்திப் பேசும் நிலையுமிருக்கிறது. ஆண் பிள்ளைகள் தறுதலையாய் அலைவதற்கும் தாயின் நிலைக்கும் சம்பந்தமிருப்பதாகக் கருதுகின்றனர்.

இத்தகைய கிராமப்புறங்களில் அன்னைக்கு சமைத்தல் தொழிலே தவிர்க்கமுடியாத கடமையாக உள்ளது. அதிகப் பட்சமாக சில வருடங்களுக்கு முன்பே பொழுது போக்கிற்காகத் தொலைக்காட்சிகள் பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் இந்த நிலையில் சற்று மாற்றங்கள் காணப்படுகின்றன. நகர்ப் புற தாயார்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சுதந்திரமும் கயிற்று முனையில் கட்டப்பட்டிருக்கும் மாட்டைப் போன்றதுதான். கயிற்றின் நீளம

் வரைக்கும் மட்டுமே அவர்களால் போய் வரமுடியும். கயிறு இல்லாமல் அவர்களால் ஒரு எட்டுகூட நகர முடியாத நிலையே இருக்கிறது.

நகர்ப் புறத்தில் வேலைக்குப் போகும் தாய்மார்கள் பொறுப்பற்றவர்களாக, அழகைப் பேணுபவர்களாக, அடங்காப் பிடாரிகளாக ஊடகங்களால் சித்திரிக்கப்படுகின்றனர். அப்படி வேலைக்குப் போகும் தாய்மார்களின் பிள்ளைகள் அன்புக்கு ஏங்கி ரௌடிகளாக மாறிப் போவதாகவும் சித்திரிக்கின்றன. ஆக நவீன வாழ்க்கை முறையிலும் குழந்தைகள் வளர்ப்பதே தாயின் கடமையாகச் சித்திரிக்கப்படுகிறதை விளங்கிக் கொள்ளலாம்.

அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் இந்த பல நூற்றாண்டு நிலையை மாற்றுவதாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டியது. உயர்தர மற்றும் மத்தியத் தர மக்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருக்கிற பட்சத்தில், விழா கொண்டாடப்படுவதற்கான நோக்கமே அடிபட்டுப் போகும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலைநிமித்தமாகச் சென்றுள்ள தமிழர்கள் ஆங்கிலமயமான விழாக்களைத் தமிழ்ப்படுத்திக் கொண்டாடுவது தவறில்லை. தமிழ்நாட்டில் அம்மாக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தி முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான தாய்மார்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர் என்கிற தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. தங்களுடன் தாயார்களை அழைத்துச் செல்ல முடியாததற்குக் காரணமாக சீதோஷ்ண நிலை சொல்லப்படுகிறது. ஆனால் அதில் கொஞ்சம் தான் உண்மையிருக்கிறது. தேவையற்ற சுமையையே இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் உண்மையிலேயே அன்னையர்கள் வாழ்வில் சந்தோசத்தைக் கொண்டு வந்தால், அதை விடச் சந்தோசம் இந்த உலகத்தில் வேறெதிலும் இருக்க முடியாது.

தண்ணீர் ஏன், எவ்வளவு குடிக்க வேண்டும்? - மருத்துவம் விவரிக்கும் உண்மைகள்!


'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் கூற்று. நம் உடலுக்கும் தண்ணீரே அடிப்படை. ஆரோக்கியத்துக்கு தண்ணீர் எவ்வளவு அடிப்படையானது, நம் உடல் இயக்கங்களில் அதன் பங்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி அறிந்தால், ஆச்சர்யம் மேலோங்கும்!

சரி... ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? அந்தத் தண்ணீர் வியர்வையும் சிறுநீருமாய் எப்படி வெளியேற்றப்படுகிறது? அதற்கானத் தேவையும் முக்கியத்துவமும் என்ன? சிந்தித்துப் பார்க்கிறோமா? தவிக்கும் நேரம் மட்டும் தண்ணீர் அருந்திவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்குகிறோம்.

தண்ணீரை அப்படி சர்வ அலட்சியமாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால், உடம்பின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீர் நிரம்பியிருக்கிறது. நம்பமுடிகிறதா? அறிவியல் பூர்வமாக அதுதான் உண்மை. அதுபற்றிய தகவல்களை விரிவாகத் தருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி.

ஆண்களுக்கு 60 சதவிகிதம்... பெண்களுக்கு 55 சதவிகிதம்!

''திசுக்களின் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாக இருப்பது தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் (Electrolytes). இவை உற்பத்தி ஆவதும் உட்கிரகிப்பதும் முழுவதுமாக குடல்பகுதியில்தான். செல்களின் வெளிப்பகுதியில் உள்ள இறுக்கமான இணைப்புகளுக்கு இடையே சவ்வூடு பரவல் (Osmosis) மூலம் நின்று நிதானிக்கிறது தண்ணீர். அதேசமயம், உடலின் மொத்த நீரின் அளவில் 3-ல் 2 பங்கு செல்களுக்கு உள்ளேயே காணப்படுகிறது. அதனால்தான், செல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு தண்ணீர் பிரதானமாக விளங்குகிறது. கொழுப்பு திசுக்களாக இருக்கிறபட்சத்தில், அதற்குள் நீரின் அளவு குறையும்.

ஆண்களுக்கு உடல் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர் இருந்தால் பெண்களுக்கு 52 சதவிகிதம் முதல் 55 சதவிகிதம் மட்டுமே இருக்கும். உடல் பருமன் மற்றும் முதுமையடைந்த  பெண்களுக்கும் ஆண்களுக்கும் நீரின் அளவு கணிசமாகக் குறையலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.

சராசரியாக 68 கிலோ எடை இருப்பவரின் உடலில் 41 லிட்டர் தண்ணீர் இருக்கக் கூடும். அதில் 23 முதல் 27 லிட்டர் திசுக்களின் உள்ளேயும், 7 லிட்டர் திசுக்களின் வெளியேயும் அதைச் சுற்றியும் இருக்கிறது. 4 லிட்டர் தண்ணீர் ரத்தப் பிளாஸ்மாவில் இருப்பதாக மருத்துவக் கருத்தரங்க ஆய்வுகள் முன்வைக்கின்றன.

ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் ஏறக்குறைய 85 சதவிகிதம் தண்ணீர் அதன் உடலில் மிகுந்திருக்கும். குழந்தைப் பருவம் எய்துகிறபோது 75 சதவிகிதம் ஆக அது குறையும். ''உடலில் தண்ணீர்ச் சத்து குறைந்தால் மயக்கம், நினைவிழத்தல், ஏன் மரணம் கூட உண்டாகும்'' என தஞ்சையைச் சேர்ந்த சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் மோகன்தாஸ், தன் 'உணவும் நலவாழ்வும்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர்!

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடை காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.

பொதுவாக நாம் தாகத்தின்போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறோம். அதுவே போதுமானது எனக் கூறமுடியாது. பிற நேரங்களில் உட்கொள்ளக்கூடிய திரவ ஆகாரங்களினாலும் உணவுப்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கப்பெறுகிறோம். சொல்லப்போனால், செல்களால்  ஆன நம் உடலில், செல்களுக்கு வெளியில், கொள்கலன்போல் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. அதுதான் அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படும்போது ஈடு செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. எப்போதுமே உடலில் உள்ள நீருக்கும், வெளியேற்றப்படும் நீருக்கும் இடையே  இருக்கும் சமநிலையில்தான்  பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள இயலும். அதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டிய தகவல் என்னவெனில், தோராயமாக 1500 மி.லி தண்ணீர் ஒருநாளைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதுமட்டுமே உடலின் இயக்கச் சீர்பாடுகளை கட்டமைத்து சிறுநீராக வெளியேறுகிறது எனக் கணக்கில்கொள்ள முடியாது. இயல்பிலேயே உடலில் சுரக்கப்படும் நீர், தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.

உதாரணமாக, உமிழ்நீரில் 1,500 மி.லி, இரைப்பையில் 2000 மி.லி, பித்தநீரில் 500 மி.லி, கணையத்தில் 1,500 மி.லி, சிறுகுடலில் 1,500 மி.லி எனத் தண்ணீர் உடலின் அத்தனை பாகங்களிலும் சுற்றிச் சுழல்கிறது. குடல் பகுதியில் 1,400 மி.லி, (Colonic reabsorption), போர்டல் வெயின் பகுதியில் (Portal vein reabsorption) 6,700 மி.லி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நம் உணவு மண்டலத்தில் 8,200 மி.லி நீரானது விரவிக்கிடக்கிறது என்றால், அதில் 8,100 மி.லி செரிமானப் பகுதியில் உட்கிரகிக்கப்படுகிறது. எஞ்சிய 100 மி.லி தண்ணீர்தான் மலத்துடன் வெள

ியேற்றப்படுகிறது என்பதை ‘டேவிட்சன்’ எனும் ஆங்கில மருத்துவ நூல் வாயிலாக அறியலாம்.

சுரப்பு நீர், செரிமானம், கடத்துதல், கரைத்தல், சுத்திகரிப்பு!

தண்ணீர் டூ சிறுநீர் என்பது வெறும் உள்ளே வெளியே ஆட்டம் அல்ல. தண்ணீரின் பயன்பாடு அளப்பரியது. உடலுக்குத் தேவையான சுரப்பு நீர், உணவுச் செரிமானம், அதற்குப் பிறகான சத்துப் பொருட்களை கடத்துதல், கரைத்தல் என முக்கிய பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைத் தடுக்கும் திரவமாகவும் செயல்படுகிறது. ஒவ்வாத, தேவையற்ற நச்சுப் பொருட்களை தண்ணீர் அப்புறப்படுத்திவிடுகிறது. வயிற்றுப் புண் மற்றும் சிறுநீரகக் கல் அடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.

பொதுவாக இழப்பு என்பதைவிட, கழிவாக வெளியேறும் நீரின் அளவை அறிய  வேண்டும். சிறுநீரின் வழியாக 1500 மி.லி மலத்துடன் 100 மி.லி வியர்வையில் 200 மி.லி நீர் வெளியேறுகிறது. சுவாசம் என்றால் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவது மட்டுமல்ல... காற்றுடன் 700 மிலி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியில், மனிதனின் ஆக்கப்பூர்வச் சிந்தனையில், உடல் உழைப்பில் எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியும். ஆனால், இயற்கையின் கொடையான தண்ணீரை ஒருபோதும் செயற்கையாக உருவாக்க இயலாது. மண், மரம், விலங்குகள் உட்பட மனிதனும் நீரை நம்பி வாழவேண்டும் என்பது இயற்கையின் கட்டாயம். எந்த மென்பொருட்களாலும் இதை மாற்றியமைக்க முடியாது. அதனால்தான் 'தண்ணீரைச் சேமியுங்கள்' எனச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அரசும் கவனப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நீர் அரசியல்தான் நம் சாபக்கேடு. இல்லாமையும் கலப்படமும் இதில்தான் வியாபார நோக்கில் கையாளப்படுகின்றன. இயற்கைக்குப் புறம்பாக போகிறபோதெல்லாம் உயிர் வாழ ஏதோ ஒரு வகையில் தண்ணீர் நம்மை கைகோத்துக் கொண்டே இருக்கிறது.

ஆகவே, யார் தடுத்தாலும் விலைமதிப்பற்ற நீரின் இயக்கம், நம் உடலுக்குள் தன்னியல்பாக நடந்துகொண்டே இருக்கும். இதில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் உடற்கூறுகள் பாதிப்படையும் அல்லது உடல் பாதிப்பால் நீர் இயக்கத்தில் சிக்கல் ஏற்படலாம். உடல் எடை, வயது, பருவகால மாற்றங்கள், உடற்பயிற்சி, மருத்துவக் காரணங்கள் இவற்றை மனத்தில் கொண்டு, காய்ச்சிய நீரை தேவைக்கேற்ப அருந்த வேண்டும்.

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் வேண்டாம்!

இன்னொரு புறம், தண்ணீர் நல்லது எனக் குடம் குடமாகக் குடிப்பது ஆபத்தில் முடியும். சிறுநீரகம் தன் வேலையில் திணற ஆரம்பிக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடனே மூளை நரம்பு மண்டலம் தூண்டப்படும். தாகம் ஏற்பட ஆரம்பிக்கும். தண்ணீர் குடித்தாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். பெரும்பாலும் தன்னைத் தானே சரி செய்யக் கூடிய வகையிலேயே உடல் அமைப்பு உள்ளது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருந்தால் தாகம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

உணவு இல்லாமல் 50 நாட்கள் கூட வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருசில நாட்கள் கூட வாழமுடியாது என்கிறார்கள். நீருக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடியம் அதிகமானால் தாகம் அதிகரிக்கும். சோடியம் குறைந்தால் சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றும். அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படுகிற காலகட்டத்தில் மூளையில் சுரக்கும் வேஸோபிரஸ்சின் (Vasopressin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்தில் நீர் வெளியேறுவதைக் குறைத்து விடுகிறது. இருதயம் மற்றும் சிறுநீரகம் அவைகளுக்கான வேலைகளைச் சரிவர செய்ய இயலாத நிலையில், நுரையீரல் மற்றும் திசுக்களில் தண்ணீர் கோத்து நிற்கிறது. இதனால் கை,கால், முகம், வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதோடு மூச்சுத் திணறலும் உண்டாகிறது. இந்த நேரங்களில் மருத்துவரை அணுகி முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், வறட்சியால் வாய் உலர்ந்து, கண்கள் உள்ளே போய் பலமிழக்கும் நிலை வந்தால் உப்பு, சர்க்கரை கலந்த நீர் (ORS), நீர் மோர், இளநீர், பழச்சாறு போன்றவை அருந்தி ஈடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இயற்கை மருத்துவத்தில் நீர்சிகிச்சை என்று கூட உண்டு. இவையெல்லாம் கடந்து, நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைத் தடுக்க, மருத்துவமனைகளில் உடனடியாக சிரைத்திரவம் (Intra venious fluids) செலுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.

பெண்கள் தண்ணீர் தவிர்க்கக் கூடாது!

உடல் எடையில் 5 சதவிகிதம் நீர்ச்சத்து குறைந்தால் நம் வேலைத்திறன் 30 சதவிகிதம் குறைவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், நாம் உயிர்வாழத் தண்ணீரின் பங்கு எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். முக்கியமாகப் பெண்கள் இதை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வெளிப் பிரயாணங்களில் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்கிற அச்சத்தால் தண்ணீர் குடிப்பதை பெண்கள் முற்றிலுமாகத் தவிர்க்கின்றனர். இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மே

ற்கூறிய காரணங்கள் தெளிவுபடுத்தும்.

போதிய கழிப்பறை வசதி இன்மை மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வறட்சி ஏற்பட்டு நீர்ச்சத்து குறைகிறது. இதனால் அடர் மஞ்சள் நிறத்துடன்கூடிய சிறுநீரோடு நீர்க்குத்தலும் ஏற்படும். இயற்கை உபாதைகளை அடக்குவதால், ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கு நேரங்களில் உதிரத்தோடு தண்ணீரும் அதிகம் வெளியேறுமோ என்று பெண்கள் பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக மாதவிடாயில் 40 மி.லி முதல் 50 மி.லி ரத்தம் மட்டுமே வெளியேறும். அதேநேரம், மட்டுப்படாத உதிரப்போக்கு மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் (Menopause) ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களால் உண்டாகும் கட்டுக்கடங்காத வியர்வை இவற்றால் நிச்சயம் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும். பதட்டமின்றி விழிப்பு உணர்வோடு பெண்கள் தங்கள் மருத்துவ நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டும்.

வயதான காலங்களில் செல்களின் செயல்களில் தேக்கம் ஏற்படலாம். உடலுக்குள் நீர் தேவைப்படும். ஆனால், தாகம் எடுக்காமல் இருக்கும். வாழ்க்கையின் மீதான விரக்தி, உளச் சோர்வு, உடல் நலம் குறித்த ஆர்வமின்மை போன்ற மனக் காரணங்களால் தண்ணீர் அருந்துவதில் முதியோர் கவனக்குறைவாக இருக்கின்றனர். உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகப் பழக வேண்டும்.

தரமற்ற பாட்டில்கள், பாக்கெட்டுகள், கேன்களில் விற்கப்படும் நீர், நச்சு ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. இதனால், வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாய்டு போன்ற அசுத்த நீரால் வரக்கூடிய தொற்று நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரும் மண்பானை நீருமே ஏற்புடையது.

வந்தபின் காப்பது அனுபவம். வருமுன் காப்பது புத்திசாலித்தனம். நிறைவாகத் தண்ணீர் அருந்தி, நோய்கள் தவிர்த்து, நலமோடு வாழ முயற்சிக்கலாமே!

- சிவானந்த சித்தன்
إرسال تعليق (0)
أحدث أقدم